Monday 20 October 2014

பெருந்தமிழன்

அனைவருக்கும் இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்!




உலகில் மூத்தோன் தமிழன் எனப் பெருமையுடன் வாழ்வோம்! 

பண்டைப் பெருந்தமிழன் பெருமை போற்றுவோம்!!

Monday 14 April 2014

நல் வாழ்த்துக்கள்!



அன்பர்கள் அனைவருக்கும் 

சித்திரை நன்னாள் 

நல் வாழ்த்துக்கள்!

Sunday 13 April 2014

வளைகுடா தமிழர்- வாழ்வியலின் மறுபக்கம்

வளைகுடா தமிழர்- வாழ்வியலின் மறுபக்கம் !

உலகில்  எங்கும் செல்ல விசா , பாஸ்போர்ட் தேவைப்படாத , பறவைகளாக நாம் இருந்தால் என்ன இன்பம்! அதைவிட, வேலை செய்த களைப்பில் இருந்து , தங்குமிடம் வரும் வரை அனுபவிக்கும் மன வேதனைகள் , நாம் பறவைகளாக இருந்தால் , பறந்து வந்து விடலாம் அல்லவா!

வளைகுடா!

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் போல அல்ல! வந்த பின்னே மட்டுமே நமக்குத்  தெரியும் நம் வாழ்க்கை இனி எப்படி இங்கே என்று!

எத்தனை முகங்கள்! எத்தனை விமானங்கள்! தினமும் ஆயிரம் ஆயிரம் கற்பனைகளையும் கனவுகளையும் இங்கே இறக்குமதி செய்து விட்டு மீண்டும் தயாராகின்றன, அடுத்த கனவுகளையும் சுமந்துவர..!

எத்தகைய ஆற்றல் மிக்கோன் ஆயினும், இங்கே புதுமுகம் தான், வளைகுடா அனுபவம் இல்லையா, "இல்லை வேலை" எனும் நிலைதான் , ஆயினும் விதிவிலக்கு உண்டு, மேல்தட்டு பணிகளுக்கு. ஆயினும் எம் தமிழன் மிக அதிகம் உள்ளது கீழ்நிலைப்பணிகளுக்கும், இளநிலை பணிகளுக்கும்தானே!

அதிகாலையில் , வீட்டில் எழ மனமில்லாமல் , படுக்கையில் இருந்து எழுந்து, நிதானமாக காலை வேளையைக் கழிக்கும் தமிழன் இங்கே இல்லை!

இவன் அதிகாலையில் அரக்கப்  பரக்க எழுவான், அழைத்து செல்லும் வாகனம் ஒலி கேட்டதும் , அவன் வேகமும் , பரபரப்பும், அளவிடா முடியா அளவில் அமைந்து, அவனை வாகனத்தில் சென்று திணித்துவிடும்!,  தாமதத்தின் விலை அவனின் அன்றைய சம்பள இழப்பு மட்டுமல்ல..! அவன் மாதாந்திர கடன் சுமையை அதிகப்படுத்தும் ஒரு கொடிய நிகழ்வும்கூட..!

இப்படியெல்லாம், நிற்க நேரமில்லாமல், தன்னை நம்பிய குடும்பத்திற்காக ,தன் சுய விருப்பு வெறுப்புகளை மறந்து,சமயத்தில் தன்னையே மறந்து தன்  மக்களுக்காக ஒடி உழைக்கும் தமிழனின் வளை குடா வாழ்வின் அவலங்களும் , அந்தப்பாலைவனக்காற்றில் கரைந்துபோன அவனின் வேதனைக்குரல்களும், வெளியுலகம் கேட்டதுண்டா? குறைந்தபட்சம் வளைகுடாவில் நல்ல நிலையில் பணியில் தம் மனைவி மக்களுடன் மன நிறைவுடன் குடும்பமாக வாழ்ந்து வரும் சக தமிழன் அறிவானா?

அல்லது சொந்த ஊரில் அவன் வந்தால் ஆட்டமும் பாட்டும் சந்தோசமும் மனதில் இன்பமும் , தற்காலிகமாக நிம்மதியும் அடையும் அவனின் சுற்றமும் நட்பும் அறியுமா? அவனின் சொல்லொனாத்  துயரமும் ! வலிகளும்!

இல்லை அவன் தான் கூறுவானா?, தன் வேதனைகளை !, சொல்லிவிட்டால் , எல்லோர் மனதும் வாடிவிடும் , பிறகு அவன் அங்கு இருக்கும் நாளெல்லாம் , அவனைப்பார்க்கும் பார்வைகளில் , அவன் வளைகுடாவில் அடைந்த வலிகளைவிட அதிகமாகும் என்பதுடன்  அல்லாமல்,அவன் இருக்கும் 10,  20 தினங்களும் வேதனையாகிப்போகும்! குடும்பத்தோரின் பரிதாபப்பார்வையைப் பார்ப்பதற்கா, திரும்பி வந்தோம்!, 
மீண்டும் செல்வோம்! என்னிலையாயினும் , நம் நிலைமை எத்தனை ஆண்டுகளில் தீருமோ, அத்தனை ஆண்டுகள் கழித்தே நாடு திரும்புவோம்,

பாலைவன வெம்மையும், பணிகளின் கடுமையும் தாங்கிக்கொள்ளலாம், எம் குடும்பம் எம்மேல் காட்டும் இந்த பச்சாதாபம் எம்மைக்கொல்லுதே! எனப் 
பேதமைகொண்டே, எம் தமிழன் தன் நிலை குறித்து , தாய்நாட்டில் எவரிடத்திலும் உரைப்பதில்லை!

இத்தகைய அல்லல்களை , வளைகுடாவில் வாடும் எம் தேசத்தமிழன் நிலைகளை வெளியுலகம் அறியத்தரவே, இந்த ப்ளாக் தளம்!

கண்ணுறும் எவரையும்  , மனம் வேதனைகொள்ளச்செய்யவோ அல்லது வருந்தச்செய்யவோ எமக்கு எண்ணமில்லை!

வளைகுடாவில் இரத்த வியர்வை சிந்தி உழைக்கும் தாயகத்தமிழன் அனுப்பும் பணத்தின் மதிப்பு, அதன் மிக அதிகமான மற்ற தேசத்தின் பணத்துடன் ஒப்பிடும் மதிப்பைக்காட்டிலும் மிக அதிகம்! 

இதை உணர்ந்து , அந்தப்பணத்தினை மிகக்கவனமாகப் பயன்படுத்தினால், அதுவே இப்பதிவின் மிகப்பெரிய நற்பலனாய்க்கண்டு பெருமிதம் கொள்வோம்!


- தொடரும்.

குடும்பம் காக்கப்  பாடுபட்டு பொருள் ஈட்டும் அனைத்து வளைகுடா தமிழர்க்கும் எமது அன்பான வணக்கங்களும் வாழ்த்துக்களும்!

ஞானகுமாரன்

அஜ்மான், UAE .